Friday, June 14, 2019

தஞ்சாவூர் சமுத்திரம் ஏரியின் கதை.

தஞ்சாவூர் கிழக்கு எல்லையைத் தாண்டியதும் நாகப்பட்டினம் நெடுஞ்சா லையினை ஒட்டி வடபுறம் ஒரு நீண்ட நீர் நிலை இருப்பதைக் காணலாம்.இதற்கு சமுத்திரம் எரி என்று பெயர்.இந்த எரி எப்படி ஏற்பட்டது என்று தஞ்சைவாசிகளில் மூத்த குடிமக்கள் ஒரு கதை சொல்வார்கள்.அது என்ன கதை?
       
           தஞ்சாவூரைஆண்ட ராஜாவினுடைய மகாராணி கடலில் கப்பல் போவதைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டாள். தஞ்சாவூர் ராஜா தன பட்டது ராணியின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்தான்.ஆனால் கடலுக்கு ராணியையும் அரச குடும்பத்தையும் அழைத்து செல்வது அந்த காலத்தில் முடியாத காரியம் இல்லையா? அதனால் ராஜா ஒரு  யோசனை செய்தான். அரண்மனைக்கு நேர் கிழக்கில் ஒரு ஏரி வெட்டி நீரை நிரப்பி, கப்பல் செய்து அதில் ஓடவிட்டான். அந்த ராணியும் கடல் இப்படிதான் இருக்கும் கப்பல் இப்படிதான் ஓடும் போல என நினைத்துக் கொண்டாள்.  அந்த எரியை, ராணி சமுத்திரம் என்று மக்கள் பெயர் வைத்து அழைக்கத் தொடங்கினார்கள். இது தஞ்சையில் பேசப்படும் செவி வழி கதை.

        உண்மையில் இந்த எரிக்குப்பின்னால் ஒரு சொல்ல மறைந்த வரலாறே இருக்கிறது.அது என்ன வரலாறு...?.அது என்ன கதை....?.பார்ப்போம்.

      தஞ்சாவூரைத் தலை நகராகக் கொண்டு மாமன்னர் ராஜா ராஜ சோழ தேவர் ஆட்சி செய்து வந்த காலம், கி.பி.985-1014.அவர் ஆட்சி காலத்தில் சோழ தேசத்து வணிகர்கள் பர்மா,மலாயா,கம்போடியா,சீனா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு  கடற் பயணம் மேற்கொண்டு பெரும் பொருளீட்டி வந்தார்கள். சீனாவிற்கும் சோழ தேச துறைமுகங்களுக்கும் இடைப்பட்ட முக்கிய நாடு ஸ்ரீவிஜயம் எனப்பட்ட சுமித்திரா .சோழ தேசத்து வணிகர்கள் கடல் காற்றின் விசையால் ஸ்ரீவிஜய நாட்டு துறைமுகம் சென்று இறங்குவார்கள்.அங்கே வரும் சீன தேசத்து வணிகர்களுடன் பண்ட மாற்று வணிகம் நடைபெறும்.இதில் சுங்க தீர்வையாக ஸ்ரீ விஜயம்  கொள்ளை லாபம் அடித்து வந்தது. சோழர்களுடன் நட்புறவுடன் இருப்பதுபோல் காட்டிகொண்ட ஸ்ரீவிஜயம் ,தன் நாட்டிற்கு வரும் சோழ தேசத்து வணிகர்களிடம் தன் இன்னொரு முகத்தைக் காட்டி வந்தது, அது மட்டுமல்லாமல் நேரடியாக சீனாவுடன் தொடர்பு கொள்வதையும் இவர்கள் அனுமதிப்பது இல்லை.இதைவிட இன்னுமொரு மோசமான காரியமும் செய்தார்கள்.சீனாவுடன் தூதரக உறவு வைத்து இருந்த ஸ்ரீவிஜயம் சீன தேசத்து மன்னர்களிடம் ஒரு மிகப் பெரிய பொய்மூட்டையை அவிழ்த்து விட்டு இருந்தது.அப்படி அந்த புளுகு மூட்டையில் என்னதான் இருந்தது?

     சோழர்கள் காட்டுமிராண்டிகள்,எங்களுக்கு அடிமைப் பட்டவர்கள்.எங்களுக்கு கீழ் படிந்து நடப்பவர்கள்.என்றெல்லாம் கதை விட்டு சோழர்களைப் பற்றியும் சோழ தேசத்து வணிகக் குழு பற்றியும் தவறான தகவல்களை பரப்பி இருந்தார்கள்.ஸ்ரீவிஜயத்தின் ரெட்டை வேடம் களையும் காலமும் வந்தது.

     காலப்போக்கில் சோழ தேசத்து வணிகக் குழு இந்த பொய் புரட்டு கதையைத் தெரிந்து கொண்டது.சோழம் திரும்பிய வணிகர்கள் மாமன்னர் ராஜ ராஜ சோழரை சந்தித்து ஸ்ரீவிஜயத்தின் தில்லு முள்ளு வேலைகளையும்,தங்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளையும் எடுத்துக் கூறியதுடன்,சோழத்தின் உயர்வையும் பெருமையையும்,சிறப்பையும் சீன தேசத்து மன்னர் உணர உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ளவேண்டும் என்றும் முறையிட்டார்கள்.

     இத்தனை காலம் நமக்கு இது தெரியாமல் போயிற்றே என்று ராஜராஜரும் வருந்தினார்.மந்திரிகளின் ஆலோசனையை கேட்டறிந்தார்.வணிகர்கள் குழுவை வரவழைத்து அவர்கள் சொல்வதையும் கேட்டுக் கொண்டார்.உடனே ஒரு முடிவிற்கு வந்தார்.சீன தேசத்திற்கு ஒரு தூதுக் குழுவை அனுப்புவதென்ற தன் முடிவை அறிவித்தார். 52 பேர் கொண்ட உயர் மட்டத் தூதுக் குழு தெரிவு செய்யப்பட்டது. இந்த குழுவில் மன்னரின் நம்பிக்கையைப் பெற்றவர் தூதுக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.அவர் பெயர் சோழ சமுத்திரன்.

    கி.பி.1013 ல்  நாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்ட  இந்த குழு பற்றியோ,குழுவில் இடம் பெற்றவர்கள் பற்றியோ நம்மிடம் எந்த ஆதாரமும் கிடையாது.சீன தேசத்து ஆவணங்களில் இருந்துதான் இந்த தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.சீன மொழியில் எழுதபப்பட்ட தமிழ் பெயர்களை மொழி பெயர்த்து தெரிந்து கொள்வது மிகவும் கடினமானது.ஜப்பானிய அறிஞர் நெபுறு கரோஷிமா முயற்சியால்தான் இந்த தகவல்கள் தெரிய வந்தன.இல்லாவிட்டால் சோழர்களின்  ஒரு மிகப் பெரிய வரலாறே மறைந்து போயிருக்கும்.

     தூதுக்குழு இரண்டு ஆண்டுகள் கடலில் பயணித்து,வழியில் உள்ள நாடுகளுக்கும் நல்லண்ண பயணமாக சென்று இறுதியாக சீன தேசத்து துறைமுகப் பட்டினம் சென்றடைந்தது. சீனத்து மன்னரும் அவர்களை மிகுந்த கௌரவத்துடன் வரவேற்று உபசரித்தார்.தஞ்சை மன்னர் கொடுத்த பரிசுப் பொருட்களை சீனத்து மன்னருக்கு வழங்கி ,இராஜராஜ சோழரின் கடிதத்தை யும் கொடுத்தார்கள்.தங்கள் தேசத்தின் சிறப்புகளையும் தங்கள் மாமன்னரின் வெற்றிகளையும் ஆட்சி அதிகாரங்களையும் ஸ்ரீவிஜய நாட்டிற்கும் மேலாண்மை மிக்கவர்கள் சோழர்கள் என்று  சீனத்து மன்னர் புரிந்து கொள்ளும் விதமாக எடுத்து சொன்னார்கள். இவற்றை எல்லாம் கேட்டு மகிழ்ந்த சீனத்து வேந்தர் அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து தந்தார்.சீனாவில் தூது குழு இப்படி ராஜ தந்திர, வணிக  உறவுகளை ராஜராஜரின் விருப்பப்படி நிறைவேற்றிக் கொண்டு இருக்கும்போது, தஞ்சையில் மாமன்னர் இராஜராஜ சோழர் ராஜராஜீஸ்வரமுடையாருடன் கலந்து ஓராண்டாகிவிட்டது.தனது  நோக்கம் நிறைவேறிய நல்ல செய்தியை கேட்டு ஆனந்திக்க சிவபாதசேகரன் இல்லை என்பது தூதுக் குழுவிற்கும் தெரியாது.

        தூதுக்குழு தனக்கு தம் மன்னர் இட்டப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி தாயகம் திரும்ப எப்படியும் ஓராண்டிற்கும் மேலாகி இருக்கும்.அப்பொழுது மாமன்னர் இராஜராஜ சோழரின் மைந்தன் ராஜேந்திர சோழன் ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருந்தார்.தந்தை அனுப்பி வைத்த தூதுக்குழுவை தனயன் வரவேற்று அவர்கள் பயண அனுபவங்களைக் கேட்டறிந்தார். பல ஆயிரம் மைல்கள்...அலைகடல் நடுவில் மரக்கலங்களை செலுத்தி,பல்வேறு தடைகளையும்,ஆபத்துக்களையும் கடந்து,சீனத்து மன்னரை சந்தித்து திரும்பிய தூதுக் குழுவினரை உரிய முறையில் கௌரவப் படுத்த ராஜேந்திர சோழர் விரும்பினார்.

       வங்கக் கடல்,சுந்தா ஜல சாந்தி,தென் தென் சீனக் கடல் என்று ,கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ,52 பேர் அடங்கிய தூது குழு, நுற்றுக்கும் மேற்ப்பட்ட கலம் செலுத்துபவர்கள், மாலுமிகள்.உதவியாளர்கள்,பாய்மர நுணுக்கம் தெரிந்தவர்கள் என ஐநூறு பேராவது இந்த கப்பல் பயணத்தில் பங்கேற்று இருப்பார்கள்.

      இந்தியாவில் இருந்து வெகு தொலைவில் உள்ள சீன தேசத்திற்குமுதல் முதலில்  கடற் பயணம் மேற்கொண்டவர்கள் சோழர்களாகத்தான் இருக்க முடியும்.எனவே செயற்கரிய சாதனை செய்த  இந்த தூதுக் குழுவின் தலைவன் பெயரால் ஒரு நினைவு சின்னம் அமைக்க திருவுள்ளம் கொண்டான். காலத்தால் அழியாததாக இருக்க வேண்டுமே? என்ன செய்யலாம்?

      காவேரியால் வளம் பெற்று விளங்கும் சோழ மண்டலத்தின் தலைநகரம் மட்டுமல்ல,சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரம் தஞ்சாவூர். இந்த மாபெரும் தலைநகரின் நீராதாரம் காவிரியோ அதன் கிளை நதிகளோ இல்லை என்பது ஒரு ஆச்சரியமான தகவலாகும்.வல்லம் பீடபூமியின் மழை நீரே தஞ்சையின் தாகம் தனித்து வந்தது.இந்த மழை நீர் அறுவடையின் ஆரம்ப புள்ளி பெரிய கோயில் பின்புறம் உள்ள செவப்ப நாயக்கன் எரி.இதுவும் சோழர் காலத்து நீர் நிலைதான்.பிற்காலத்தில் பெயர் மாற்றம் பெற்று இருக்கிறது. இன்னொரு மேல்நிலை நீர்தேக்கமாக இருந்து தஞ்சாவூர்கோட்டையை சுற்றியுள்ள அகழிக்கு நீராதாரமாக இருந்தது இன்றைக்கு அன்னை சத்தியா ஸ்டேடியம் உள்ள பகுதியாகும்..தஞ்சை கோட்டையுள் பெய்யும் மழை நீர்,அகழியின் மிகுதியான நீர் ,மற்றும் தஞ்சையின் தென் புறம் பெய்யும் மழை நீர் அனைத்தும் சென்று சேருமிடம் கிழக்கில் உள்ள மிகப்பெரிய ஏரியாகும்.கோட்டையின் தேவைகள் போக வெளியேறும் நீர் சுத்திகரிக்கப்பட்டு ,அகழியின் வடிகால் நீரும் இங்கே சேமிக்கப்பட்டு மூன்று திசைகளிலும் உள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்கும் பயன்படுத்தப்பட்டது.

       இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மிகப்பெரிய நீர் நிலைக்கு , அலைகடல் நடுவே பல கலம் செலுத்தி  சீன தேசம் சென்று வெற்றி கொடி நாட்டித் திரும்பிய தூதுக் குழு தலைவன் பெயரையே வைப்பதே வெகு பொருத்தமாக இருக்குமென்று ராஜேந்திர சோழர் முடிவெடுக்கிறார்.

         அந்த பிரமாண்டமான நீர் நிலை தூதுக் குழு தலைவன் சோழ சமுத்திரம் பெயரால் சமுத்திரம் எரி என வழங்கப்பட்டது.ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அந்தப் பெயரே இன்றும் தஞ்சை மக்கள் மனதில் நிலைத்து நின்றுள்ளது.இந்த ஏரியின் எந்த இடத்தில இருந்து மேற்கே பார்த்தாலும் பெரிய கோயிலும் அரண்மனையும் தூரத்தில் தெரிவதை பார்க்க முடியும்.

       பழைய நில ஆவணங்களின்படி இந்த எரி எண்ணூற்றி நாற்பது ஏக்கர். எஞ்சி இருப்பது இருநூற்றி இருபது ஏக்கர் மட்டுமே.இந்த ஏரியை ஒட்டி முதலில் தஞ்சை - நாகை சாலை போட்டார்கள்.சாலையை ஒட்டி நீரலைகள் மோதும். இளநீர் போல இருந்த இந்த நீரை அள்ளி பருகலாம்.தஞ்சை-சென்னை இருப்புப் பாதை இந்த சமுத்திரத்தின் ஊடாகவே போடப்பட்டது.எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டின் போது இந்த சமுத்திரத்தின் ஊடாக பைபாஸ் ரோடு போடப்பட்டது.இப்போது இந்த சமுத்திரத்தின் நீர் நிற்கும் பகுதியில் விக்கிரவாண்டி நான்கு வழி சாலை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தஞ்சை பாதாள சாக்கடை நீர்  சுத்திகரிக்கும் நிலையமும் இங்கேதான் உள்ளது.இன்னும் என்னென்ன போட்டு சமுத்திரத்தை காணவில்லை என்று தேட வைக்க போகிறார்களோ தெரியவில்லை.

           தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆக்கிரமிப்புகளை அகற்றி,ஆழப்படுத்தி, நீராதாரத்தை பெருக்கி இதில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொள்ளும் விதமாக பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தஞ்சாவூர்வாசிகளின் ஒருமித்த எண்ணமாக உள்ளது.
             

Tuesday, December 5, 2017

கம்ப சேவை

கம்ப சேவை திருவிழா .....

தஞ்சாவூர் பக்கத்துக்கு கிராமங்களில் கோடை காலத்தில் கம்ப சேவை என்ற விழா நடக்கும். இந்த விழா உள்ளூர் பெருமாள் கோயில் அல்லது பஜனை மடம் போன்ற பொது வழிபாட்டுத் தலங்களில்தான் நடைபெறும்.ஆயக்கோல் போன்ற ஒரு சிறு தூண் அல்லது கம்பம் நாடு நாயகமாக வைக்கப்பட்டு இருக்கும்.அதற்கு அபிஷேகம்,ஆராதனைகள்,அலங்காரங்கள் பூஜைகள் எல்லாம் நடக்கும்.இதற்கு முன்பாக சாதம் வடித்து மலைபோல் குவிக்கப்பட்டு இருக்கும்.ஊர் பெண்டிர் மாவிளக்கு போட்டு பித்தளை  சட்டிகளில் வைத்து இருப்பார்கள்.ஊரே அங்கு கூடியிருக்கும்.மேள தாள வாத்தியங்கள் முழங்க பெருத்த ஆரவாரத்துடன் வழிபாடு நடைபெறும்.இந்த நிகழ்வுகள் உச்சி பொழுதுக்கு மேல் தான் நடைபெறும்.

வழிபாடு முடிந்ததும் கோயிலை சுற்றி  கிடைக்கும் இடத்தில் வரிசையாக ஆண்,பெண்,குழந்தைகள்,வெளியூர் விருந்தினர்கள்,பரதேசிகள்,நரிக்குறவர் சமுதாயத்தினர் என்று ஊரின் அணைத்து சமுதாயத்தினரும் எந்த வேறுபாடும் இல்லாமல் சம்மணமிட்டு உட்கார்ந்து விடுவார்கள்.எல்லோருக்கும் வாழை இலை போடப்படும்.இலை நிறைய காய்கறி கூட்டு, பொரியல்,பச்சடி,ஊறுகாய்,என்று வெஞ்சனத்துடன் அன்னம் பரிமாறப்பட்டு, சாம்பார்,ரசம்,பாயாசம்,மோர் என்று வடை பாயாச விருந்து தட புடலாக நடைபெறும்.தேவைப்பட்டவர்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் அன்னம் முதலிய உணவு பதார்த்தங்களை வாங்கி செல்வார்கள்.எவ்வளவு கேட்டாலும் முகம் கோணாமல்,முனுமுனுப்பு இல்லாமல் மலர்ந்த முகத்துடன் உபசாரம் நடக்கும்.

சரி....இந்த கம்ப சேவை சோற்று திருவிழாவின் பின்னணி என்னவாக இருக்கும்.சங்க இலக்கியங்கள் துணை கொண்டு இதன் சிறப்புகள் என்னவென்று பார்ப்போமா..........

Monday, July 3, 2017

சொல்ல மறந்த கதைகள்..........

     தஞ்சாவூர் ராஜ்ஜியத்தை மராட்டிய மன்னர் சிவாஜி மகாராஜ் (            )ஆட்சி செய்த காலம்.அவருக்கு நான்கு மனைவியர் இருந்தும் ஆண் வாரிசுகள் இல்லை.அப்பொழுது கிழக்கிந்திய கம்பனி நாடு பிடிக்கும் சூழ்ச்சியில் ஒரு சட்டம் கொண்டு வந்தது.ஒரு ராஜ்ஜியத்தின் மன்னருக்கு ஆண் வாரிசு இல்லையென்றால் அந்த ராஜ்ஜியம் கம்பெனியார் கபளீகாரம் செய்து விடுவார்கள்.அவனென்ன நமக்கு பங்காளியா ? பார்த்தார், சிவாஜி ராஜா..அரசவையின் முக்கிய பதவியில் உள்ளோரையும்,நெருங்கிய உறவினர்களையும் கலந்து ஆலோசித்தார்.அதன் படி தன மந்திரி பிரதானியர்களையும் உறவுகளையும் மராட்டிய மண்ணுக்கு அனுப்பி அரச குடும்ப பெண்களைப் பார்த்து திருமணதிற்கு ஏற்பாடு செய்ய அனுப்பினார்,

           தஞ்சை மன்னர்களுக்கும் மராட்டிய மண்ணின் கோல்ஹாபூர் அரச குடும்பத்திற்கும் பெண் கொடுத்து எடுக்கும் உறவு உண்டு...இன்றும் கூட...!!தஞ்சை மன்னரின் திருமண தூதுவர்கள் கோல்ஹாபூர் சென்றார்கள்; தங்கள் மன்னரின் விருப்பத்தை தெரிவித்தார்கள்;கோல்ஹாபூர் மன்னருக்கு ஏக சந்தோசம்..சம்பந்தி புறத்தில் இருந்து வந்தவர்களுக்கு தடபுடல் உபசாரம்; மன்னர் தன மனைவியிடம் தஞ்சாவூர் சம்பந்தம் பற்றி கலந்து ஆலோசித்தார்; அபோழுதான் ஒரு தகவலை கோல்ஹாபூர் ராணி மன்னனிடம் தன மகள் திருமணதிற்கு விதித்துள்ள நிபந்தனையை சொன்னார்..இதை கேட்டதும் மன்னருக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.

 அப்படி என்ன சொன்னார் ராணி.? மன்னரின் மகளுக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை ..ஒன்னும் பெரிய ஆசையெல்லாம் கிடையாது.,பண்டரிபுரத்தில்  அருளாட்சி செய்யும் ரகுமாயி சமேத பாண்டு ரங்கனை சேவிக்க வேண்டும். அதுவும் திருமணதிற்கு முன் சேவிக்க வேண்டும். .

Monday, March 20, 2017

എന്താ സാറെ ഊണ് കസ്‌ഗിഞ്ഞോ നിങ്ങൾ..